Blogger Widgets

Friday, November 22, 2013

நாம் தக்லீத் வாதிகளா?



(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ஹிஷாம் MISc அவர்கள் நவம்பவர் மாத அழைப்பு இதழுக்காக எழுதிய ஆக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இலங்கையில் வேறு எந்த ஜமாஅத்தும் செய்யாத அளவிற்கு ஏராளமான அழைப்பு பணிகள் மற்றும் சமூகப் பணிகளை அல்லாஹ்வின் அருளால் இனிதே செய்துவருகின்றது. எமது பணிகளை பார்த்துப் பொறாமைப்படக் கூடியவர்கள் எமது ஜமாஅத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் மத்தியில் அவதூரான பிரச்சாரங்களை செய்துவருகின்றனர்.
எம் மீது யாரேனும் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு முன்வருவார்கள் என்றால் நாம் அவர்களை விவாத களத்தில் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். எம்மை விவாத களத்தில் சந்திப்பதற்கு திராணி இல்லாமல் எம் மீது போலியான அவதூறுகளை பரப்புகின்ற முயச்சியிலேயே ஈடுபடுகிறார்கள்.
எம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்வென்றால் நாம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பீ.ஜெ அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறோம் என்பது தான். எனவே இது குறித்து மக்களுக்கு தெளிவு வழங்குவது அவசியமாக உள்ளது.
தக்லீத் என்றால்? என்ன என்பதை முதலில் விளங்கிக் கொண்டால் நாம் தக்லீத் செய்கிறோமா? என்று இலகுவாக புரிந்து கொள்ளமுடிம்.
தக்லீத் என்றால் என்ன?
ஒருவர் குர்ஆன் வசனத்தையோ அல்லது ஹதீஸ்களையோ ஆதாரம் காட்டாமல் ஒரு மார்க்கச் சட்டத்தை கூறிஇ அதை நாம் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டால் அது தக்லீத் ஆகும்.
ஒருவர் திருமறை வசனத்தை ஆதாரமாக வைத்து அல்லது ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து ஒரு மார்க்கச்சட்டத்தை முன்வைக்கிறார். அவர் வைக்கும் வாதங்களை அலசிப்பார்த்து நியாயத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டால் அது தக்லீதாக ஆகாது.
அந்த அடிப்படையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கருத்தை கூறும் பொழுது அவர்களின் ஆதாரங்களை, வாதங்களை நாமும் அலசிப்பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்றால் அது தக்லீதாக ஆகாது. இதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
நாம் ஜமாஅத் ரீதியாக ஒரு கருத்து சொன்னால் கண்மூடித்தனமாக எற்று சொல்ல மாட்டோம். அந்தக் கருத்தின் நியாயங்களை அலசிய பின்னர் தான் வெளியிடுவோம். நாம் இது வரைக்கும் எடுத்திருக்கும் எந்த நிலைப்பாடாக இருந்தாலும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிரூபிக்க முடியுமான நிலைப்பாடாகத்தான் இருக்கும்.
TNTJ  உடன் ஒத்த கருத்தில் இருப்பதற்கு காரணம் என்ன?
நாம் தக்லீத் செய்யக்கூடியவர்கள் என்று அவதூறு பரப்பக்கூடியவர்கள் எடுத்து வைக்கும் அடிப்படை வாதம் என்வென்றால், எமக்கும் TNTJ யிற்கும் எந்த முரண்பாடும் இல்லை. அனைவரும் ஒரு கருத்தை தான் சொல்கிறார்கள் என்பது தான்.
உண்மை தான். நமக்கு மத்தியில் முரண்பாடு இல்லாமல் ஜமாஅத் ரீதியாக ஒரு கருத்தை மட்டும் தான் மக்களுக்கு அறிவிப்போம். நமக்கு எதிரானவர்கள் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்றால் நாமும் அவர்களை போல் பல கருத்துக்களை சொல்லி மக்களை குழப்பவேண்டும். ஒரு கருத்தை சொல்லி மக்களை குழப்பாமல் இருப்பது அவர்களுக்குப் பொருத்துக் கொள்ளமுடியவில்லை.
நாம் மக்களை குழப்பாமல் ஒரு கருத்தை சொல்வதற்கு அடிப்படையான ஒரு காரணம் இருக்கிறது. எமது ஜமாஅத்தில் இருக்கும் உலமாக்கள் ஏதாவது ஒரு விடயத்தை ஆய்வு செய்தால் அதை உடனடியாக மக்கள் மன்றத்தில் முன்வைக்க அனுமதிக்கமாட்டோம். மக்கள் மத்தியில் சொல்வதற்கு முன்னால் எமது ஜமாஅத் உலமாக்கள் மத்தியில் கலந்தாலோசனை செய்து குர்ஆன் சுன்னா அடிப்படையில் குறித்த ஆய்வு சரியானது தானா என்று மறு ஆய்வு செய்வோம். அதன் பின்னர் அந்த முடிவை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அறிவித்து, அங்கு உள்ள உலமாக்கள் அதை ஆய்வுக்கு உட்படுத்தி முடிவு எடுத்த பின்னர், குர்ஆன் – ஸூன்னாவூக்கு மிக நெருக்கமான முடிவாக எது இருக்கிறதோ அதை இரு தரப்பும் இணைந்து ஜமாஅத்துடைய நிலைப்பாடாகவே மக்களுக்கு அறிவிப்போம்.
யார் குர்ஆன் சுன்னா அடிப்படையில் கருத்துக்களை நிலைநாட்டுகிறார்களோ அந்த கருத்துத் தான் ஜமாஅத்துடைய கருத்தாக வெளிவரும். 50 உலமாக்கள் இருந்து அதில் 49 நபர்கள் ஒரு கருத்திலும் ஒருவர் மாத்திரம் தனிக்கருத்திலும் இருந்து அந்த ஒருவர் முன்வைக்கும் சான்றுகள் குர்ஆன் – ஸூன்னாவுக்கு நெருக்கமாக அமையும் பட்சத்தில் 49 நபர்களின் கருத்தை தூக்கி எறிந்துவிட்டு ஆதாரத்தை முன்வைத்த ஒருவரின் கருத்தே ஒட்டுமொத்த ஜமாஅத்தின் கருத்தாக அறிவிக்கப்படும். ஓன்று கூடும் உலமாக்களின் எண்ணிக்கையை பாராது முன்வைக்கப்படும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இப்படி ஒரு அருமையான திட்டத்தின் கீழ் நாம் இயங்கிக் கொண்டு இருக்கும் பொழுது எம்மால் முடிந்தவரை மக்களை குழப்பாமல் ஒரு கருத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல முடியும். அனைவரையும் ஒரே கருத்துக்கு எம்மால் கொண்டுவர முடியாவிட்டாலும் இந்த அனுகுமுறையானது சமூகத்தில் ஏலவே பத்தாக பிளவுபட்டிருக்கும் மக்களை மூன்றாகவோ நான்காகவோ குறைப்பதற்கு உதவியாய் இருக்கும்.
ஆனால் எமது ஜமாஅத்தை சாராதவர்கள் ஆளுக்கு ஆள் ஒவ்வொறு கருத்தை கூறிக்கொண்டு மக்களைக் குழப்பிவிட்டு ஒவ்வொறு கருத்திற்கு சாதகமாக மக்களை திரட்டும் பணியில் தான் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். குர்ஆன் – சுன்னா என்ற பெயரில் இவ்வளவு குழப்பமா? என்று பொது மக்கள் குழம்பும் வகையில் தான் அவர்களுடைய அழைப்புப் பணி இருக்கிறது. இந்த குழப்பமான நிலை எமக்கு ஏற்படாமல் தெளிவாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தை கூறுவது இவர்களுக்கு பெரிய குழப்பமாக இருக்கிறது.
எமது ஜமாஅத்தை பொருத்த வரையில் ஜமாஅத் கருத்தாக ஒரு கருத்து தான் வெளிவரும். ஒவ்வொறு உலமாக்களும் ஒவ்வொறு கருத்தை சொல்லி மக்களை குழப்பமாட்டார்கள். உதாரணமாக பிறை குறித்து எமது ஜமாஅத்தில் எந்த உலமாக்களிடம் கேட்டாலும் சர்வதேச பிறையைப் பின்பற்றுபவது வழிகேடு. இவர்கள் மனோ இச்சையைப் பின்பற்றுகிறார்கள். தத்தமது பகுதியில் பிறை பார்த்துத் தான் பின்பற்றவேண்டும் என்று தெளிவாக கூறுவார்கள்.
சூனியம் குறித்து எமது உலமாக்களிடம் கேட்டால் அனைவரும் ஒரு நிலைப்பாட்டைத்தான் கூறுவார்கள். இப்படி அடிப்படையான எந்த கேள்விகளைக் கேட்டாலும் பல கருத்துக்களை கூறி மக்களை குழப்பமாட்டார்கள். எனவே இது தக்லீத் கிடையாது. சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவதாகும். நாம் முரண்பாடு இல்லாமல் மக்களுக்கு ஒரு கருத்தை சேர்ப்பதற்கு அடிப்படைக் காரணம் இது தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அத்தோடு எமது ஜமாஅத்தை சாராத அன்பர்கள் நாம் எடுத்த மார்க்க நிலைப்பாடுகளில் ஏதேனும் மாற்றுக்கருத்து தெரிவித்தால் அதனை உள்வாங்கி எமது நிலைப்பாடுகளை மீள் பரிசீலனைக்கு உட்டுத்தும் விதமாய் மனந்திறந்த கலந்துரையாடல் மற்றும் பகிரங்க விவாத அரங்குகள் எனும் இரு அழகிய வாயில்களை எப்போதும் திறந்தே வைத்துள்ளோம். அனைவரது கருத்துக்களையூம் செவியேற்பதற்கான களத்தை உருவாக்கியதன் பிற்பாடும் எம்மை பார்த்து ‘தக்லீத் வாதிகள்’ என்று விமர்சிப்பார்களாயின் யார் வரட்டு வாதம் பேசுபவர்கள் யார் தக்லீத்வாதிகள் என்பது தெளிவாகவில்லையா? மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கி எமக்கிடையிலான பிளவுகளை குறைப்பதற்கு இதைவிட ஓர் அழகிய வழிமுறையை யாராவது எந்த ஜமாஅத்தாவது முன்வைத்தால் அதை ஏற்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.
அனைத்து விடயங்களிலும் ஒரே கருத்தில் தான் இருக்கிறோமா?
எமது உலாமக்களுக்கு மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்படும். அப்படி ஏற்படும் போது உடனடியாக மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லாமல் எமக்கு மத்தியில் தீர்த்துக் கொள்வோம். அதை மக்கள் மன்றத்தில் வெளிபடுத்திக் கொள்ளமாட்டோம். அப்படி எமக்கு மத்தியில் கருத்து முரண்பாடு எற்பட்டு முடிவுக்கு வந்த பல விடயங்களை பட்டியல் போட முடியும். அதே போன்று இன்னும் கருத்து முரண்பாடாகவே இருந்து டீ.என்.டீ.ஜெ யிற்கு தெரியப்படுத்தி எமது வாதங்களை மறு பரிசீலனை செய்யும் விடயங்களையும் பட்டியல் போட முடியும். ஆனால் அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மாட்டோம். நாம் தக்லீத் செய்யவில்லை என்பதற்கு இந்த பட்டியல் மிகப் பெரிய சான்றாக இருக்கும்.
எமக்குள் மாற்றுக் கருத்து ஏற்பட்டு முடிவுக்கு வந்த விடயங்களில் சில..
•             காது குத்துவது கூடும் என்ற நிலைப்பாட்டில் எமது சில உலமாக்கள் இருந்தார்கள். அவற்றை எமக்கு மத்தியில் பேசி காது குத்தக் கூடாது என்பது தான் சரியான நிலைப்பாடு என்று முடிவு எடுத்துவிட்டோம்.
•             தாடி வெட்டவே கூடாது என்ற நிலைப்பாட்டில் சில தாயிகள் இருந்தார்கள். அவற்றை எமது உலமாக்களுக்கு மத்தியில் பேசி தாடி வெட்டுவது அனுமதிக்கப்பட்ட விடயம் தான் என்று குர்ஆன் சுன்னா அடிப்படையில் முடிவு எடுத்துவிட்டோம்.
•             ஆடம்பர திருமணம் குறித்து சில சர்ச்சைகள் இருந்து அவை சரி செய்யப்பட்டன.
•             மாதவிடாய் பெண்கள் பள்ளிவாசல் வருவது கூடுமா? கூடாதா?
இவை உதாரணத்திற்காக குறிப்பிட்டவைகள்.
இப்படி ஏராளமான விடயங்களில் எமக்கு மத்தியில் சர்ச்சை ஏற்பட்டு சரி செய்து இருக்கிறோம். ஆனால் இதை பொது மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கமாட்டோம். இறுதியான முடிவைத் தான் மக்களுக்கு சேர்ப்போம்.
அதே போன்று இன்னும் சில விடயங்களில் இன்னும் சர்ச்சை இருந்து கொண்டு இருக்கிறது. அதைக் தீர்ப்பதற்குறிய ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம். டீ.என்.டீ.ஜெ உலமாக்களுக்கு எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இருக்கிறோம். இன்னும் சில விடயங்கள் நிலுவையில் உள்ளன. அதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து இப்போது நாம் இருக்கும் நிலைப்பாட்டிற்கு மாற்றமான முடிவுகளாக இருந்தால் மக்களுக்கு உடனடியாக அறியப்படுத்துவோம்.
நிலுவையில் உள்ள சில விடயங்கள்
•             ஸகாத்தின் நிஸாப் தங்கமா? வெள்ளியா?
•             ஒரு சில குறிப்பிட்ட ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறதா? இல்லையா?
•             பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றலாமா?
•             வுழூஃ செய்யும் பொழுது குழாயில் கால்களை பிடித்து கழுவுவது கூடுமா? கூடாதா?
இப்படி எமக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை நாம் மக்கள் மத்தியில் சேர்த்து அவர்களைக் குழப்பாமல் எமக்கு மத்தியல் குர்ஆன் – சுன்னா அடிப்படையில் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்த பின்னர் இப்போது இருக்கும் எமது நிலைப்பாட்டிற்கு மாற்றமான முடிவுகள் ஏதும் இருந்தால் மக்கள் மத்தியில் அறிவிப்போம்.
அதே போன்று நாம் சுட்டிக் காட்டி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாற்றிக் கொண்ட விடயங்களும் ஏராளமாக உள்ளன.
•             தேனியூடைய மலம் தான் தேன் என்று பீ.ஜெ அவர்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து தவறானது. தேனியின் வயிற்றில் இருந்துதான் தேன் வெளியேறுகிறது. என்றாலும் அது மலக்குடலில் இருந்து அல்ல. அதற்கென தனி வழி உள்ளது என்ற செய்தியை சுட்டிக் காட்டினோம். பீ.ஜெ அவர்கள் திருத்திக் கொண்டார்கள்.
•             திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சில வார்த்தைகள் மொழி பெயர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியதும் அடுத்த பிரதியில் மாற்றிக் கொண்டார்கள். (வமாஹும் பிழார்ரின பிஹி என்ற வசனத்தில் பிஹி என்பதற்கு மொழியாக்கம் விடுபட்டு உள்ளது என்று இஸ்மாயில் சலபி கூறுவதற்கு முன்னர் நாம் பீ.ஜெ அவர்களுக்கு சுட்டிக்காட்டிவிட்டோம் என்பது குறப்பிடத்தக்கது. பீ.ஜெ அவர்கள் மாற்றிவிட்டார்கள். அது தெரியாமல் இஸ்மாயில் சலபி உளரிக் கொட்டிக் கொண்டு இருந்தார்)
•             நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் ஸாபியீன்கள் என்று பீ.ஜெ அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். நபி அவர்களின் பெற்றொர்கள் ஸாபியீன்கள் அல்ல நரகவாசிகள் என்று உடனடியாக சுட்டிக்காட்டினோம். பீ.ஜெ அவர்கள் திருத்திக் கொண்டார்கள்.
•             குழந்தை கருவறையில் இருக்கும் போது மூலை வளர்ச்சி குறைவாக உள்ளது என்று ஸ்கேனிங் மூலம் அறிந்து கொண்டால், அந்தக் கருவைக் கலைக்கலாம் என்று பீ.ஜெ அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். அது தவறான கருத்து என்று நாம் சுட்டிக்காட்டிய பிறகு அதை மாற்றிக் கொண்டார்கள்.
இப்படி இன்னும் பட்டியல் போடலாம். மக்கள் விளங்கிக் கொள்வதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
இவற்றை நாம் சுட்டிக் காட்டி பீ.ஜெ அவர்கள் திருத்தி விட்டார்கள் என்று விளப்பரம் செய்து பெறுமை அடித்துக் கொண்டு இருக்கமாட்டோம். எமது ஜமாஅத் என்பது ஒரு குடும்பம் போன்றது. தவறுகள் ஏற்பட்டால் எமக்குள் நாம் திருத்தம் செய்து கொள்வோம். இதை தெரியாதவர்கள் டீ.என்.டீ.ஜெ சொல்வதை நாம் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்கின்றோம் என்று அவதூறுகளை பரப்புகிறார்கள்.
டீ.என்.டி.ஜெ உலமாக்கள் பீ.ஜெ அவர்களைப் பின்பற்றுகிறார்களா?
நாம் டீ.என்.டீ.ஜேயை தக்லீத் செய்கிறோம் என்று எப்படி எம்மைப் பற்றி அவதூறுகளைப் பரப்புகிறார்களோ, அதே போன்று டீ.என்.டீ.ஜெ உலமாக்கள் பீ.ஜெ அவர்களை தக்லீத் செய்கிறார்கள் என்றும் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவும் எப்படி எமது வளர்ச்சியைப் பார்த்து மற்ற இயக்கங்கள் பொறாமை படுகிறார்களோ அதே போன்று டீ.என்.டீ.ஜெயின் பாரிய வளரச்சியைப் பார்த்து மக்களைக் குழப்பவேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பப்படுகிற அவதூறுகளாகும்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்தவரையில் அவர்களும் ஒரு கருத்தை வெளியிடுவதாக இருந்தால் உலமாக்களை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை வைத்து எடுக்கப்படும் முடிவுகளைத்தான் அறிவிப்பார்கள். டீ.என்.டீ.ஜெ உலமாக்களும் பீ.ஜெ அவர்கள் அவ்வப்போது தவறுகள் விடும் பொழுது உடனடியாக சுட்டிக்காட்டுவார்கள். பீ.ஜெ அவர்களை தக்லீத் செய்வதாக இருந்தால் சுட்டிக்காட்டப்பட்டு இருக்காது. பீ.ஜெ அவர்கள் கூறும் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்றிவிட்டு சென்று இருப்பார்கள். டீ.என்.டீ.ஜெ உலமாக்கள் சுட்டிக்காட்டி பீ.ஜெ அவர்கள் மாற்றிக் கொண்ட விடயங்களும் எராளமாக உள்ளன. உதாரணத்திற்காக ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.
•             ஒரு முறை ஸகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்கவேண்டுமா? என்ற வாதம் பீ.ஜெ அவர்கள் முன்வைத்தது அல்ல. டீ.என்.டீ.ஜெயின் மாநில பேச்சாளராகிய M.I சுலைமான் அவர்கள் முன்வைத்த வாதமாகும். அந்தக் கருத்து சரி என்று குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிரூபனம் ஆன பிறகு பீ.ஜெ அவர்களும் தன் கருத்தை மாற்றிக் கொண்டார்கள்.
TNTJ உலமாக்கள் பீ.ஜே அவர்களை தக்லீத் செய்யக்கூடியவர்கள் என்றால் இவற்றை பீ.ஜேயுடன் கலந்தாலோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. பீ.ஜே கூறியிருக்கும் கருத்துக்களை ஆமாம் சாமி போட்டுவிட்டு கண்மூடித்தனமாக பின்பற்றி விட்டு சென்று இருப்பார்கள்.
அதே போன்று சகோதரர் பீ.ஜெ அவர்களாக இருக்கட்டும் டீ.என்.டீ.ஜெ யைச் சார்ந்த மற்ற உலமாக்களாக இருக்கட்டும் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். தவறுகள் குர்ஆன் சுன்னா அடிப்படையில் சுட்டிக்காட்டப்படும் போது கௌரவம் பார்க்காமல் ஏற்றுக் கொள்வார்கள். எமக்கும் யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக் கொள்வோம். அதே போன்று விதண்டாவாதம் செய்யக் கூடியவர்களுக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் மறுப்புக்களையூம் தெரிவிப்போம்.
எம்மை நோக்கி சுட்டிக்காட்டப்படும் அதிகமான விடயங்கள் தாங்கள் ஒரு மேதை அல்லது ஏதாவது புதுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் எந்த சரியான ஆதாரமும் இல்லாமல் சுட்டிக்காட்டப்படுபவையாகத்தான் இருக்கும். அவற்றிக்கு நாம் பதில் சொல்லும் போது டீ.என்.டீ.ஜெ மற்றும் எஸ்.எல்.டீ.ஜெ யைச் சார்ந்தவர்களுக்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் தவறான பிரச்சாரம் செய்வதைப் பார்க்கலாம். எமது ஜமாஅத்தை சாராதவர்கள் ஒரு தவறை ஆதாரத்தின் அடிப்படையில் சுட்டிக் காட்டினாலும் நாம் திருத்திக் கொள்வோம். திருத்திக் கொண்டும் இருக்கிறௌம்.
உதாரணமாக, நோன்பு துறக்கும் போது ஒதும் ‘தஹபல் லமஉ….’ என்று ஆரம்பிக்கும் துஆ பலவீனமானது என்று சுட்டிக் காட்டப்பட்டது. சுட்டிக்காட்டப்பட்ட விடயம் சரியாக இருந்தது. அதை நாம் ஏற்றுக் கொண்டோம்.
பீ.ஜெ அவர்களின் திருகுர்ஆன் மொழியாக்கம் குறித்து தொண்டி என்ற ஊரில் முஜீபுர் ரஹ்மான் என்பவருடன் ஒரு விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பீ.ஜெ அவர்கள் ஸஹாபியின் கூற்றை அடிப்படையாக வைத்து அயிஷா(ரலி) அவர்கள் சுவர்க்கத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக இருப்பார்கள் என்று கூறுவதாக எதிர்த்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டபோது, பீ.ஜெ அவர்கள் உடனடியாக அந்த கருத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று தன் தவறை திருத்திக் கொண்டார்.
இப்படி ஏராளமான விடயங்கள் உள்ளன. அல்லாஹ்வின் பேருதவியால் இப்படிப்பட்ட நல்ல பண்புகளையூம் அறிவுப்பூர்வமான திட்டங்களையூம் வைத்து எமது ஜமாஅத் செயல்படும் காரணத்தினால் தான் இன்று மக்கள் எம்மை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை சகித்துக் கொள்ளமுடியாத காரணத்தினால் தான். எஸ்.எல்.டீ.ஜெ தக்லீத் செய்யக்கூடியவர்கள் என்று அவதூறான பிரச்சாரங்களை செய்துவருகிறார்கள்.
எம்மைப் பார்த்து தக்லீத்வாதிகள் என்று விமர்சிப்பவர்களைப் பார்த்து நாம் கேட்கவிரும்புவது இதுதான்:TNTJ சொல்வதையே SLTJ யினரும் சொல்வதனால் எம்மை தக்லீத்வாதிகள் என்று நீங்கள் சொல்வீரு்களாயின் அன்ஸாரு் தப்லீகி அவரு்களின் கருத்தை அச்சுப்பிசகாது மேடைகள் தோரும் பேசிவரும் அப்துல் ஹமீத் ஷரஈ. டாக்டர் ரஈஸூத்தீன் போன்றவர்களும் தக்லீத் வாதிகளா? இஸ்மாயில் ஸலபி எந்த வாதங்களை வைக்கிறாரோ அதை ஒட்டுமொத்த JASM வகையராக்களும் பிரதிபலிக்கிறார்கள் என்றால் இதுவும் தக்லீத் இல்லையா?
மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் ஒரு கருத்தை சொல்லும் போது அதே நிலைப்பாட்டை அவரது ஜமாஅத் விசிரிகள் எடுத்துச் சொன்னால் இதுவும் தக்லீத் இல்லையா? அர்ஹம் மவ்லவியின் அபிமானிகள் அவரோடு இணைந்து ஒரு கருத்தை பரைசாட்டினால் அதையும் தக்லீத் எனலாமா? ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு அவசியம் முரண்பட்டு தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் நிலைப்பாடா? இவர்களின் வாதப்படி பார்த்தால் ஓர் அமைப்பு ரீதியாக ஒன்றித்த கருத்தை முன்வைப்பதே மகா வழிகேடு என்றல்லவா சொல்ல வேண்டி வரும். இந்நிலைப்பாட்டின் படி இவர்களே தக்லீத்வாதிகளாக மாறிவிடுவார்களே? இந்த அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லாமை ஆச்சர்யமாக இருக்கிறது. ஆதாரத்தின் அடிப்படையில் ஒருவரது கருத்தை ஏற்பதற்கும், ஆதாரமில்லாமல் பக்தியின் அடிப்படையில் ஒருவரது கரத்தை ஏற்பதற்கும் வித்தியாசம் காணத்தெரியாத இவர்களை என்னவென்று சொல்வது? நாம் எடுத்துள்ள நிலைப்பாட்டை எவருடனும் விவாதிக்க நாம் தயாராக  இருக்கும் போது, எம்மை எதிர்ப்பவர்கள் எம்மோடு விவாதக்களத்தை சந்திக்க திராணியற்று பின்வாங்கி ஓடுகிறார்கள். எந்தக்கருத்தையூம் பேசத்தயார் என்று முன்வருபவர்கள் தக்லீத் வாதிகளா? குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு தொடை நடுங்கிகளாக திரைக்குப்பின் ஓடி ஒளிபவர்கள் தக்லீத் வாதிகளா?
எனவே, எமது நிலைப்பாட்டை தக்க சான்றுகளுடன் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். காய்தல் உவத்தல் இன்றி இருதரப்பு வாதங்களையூம் அலசிப்பார்த்து யார் சத்தியவான்கள் யார் அசத்தியவான்கள் என்பதை முடிவு செய்ய வேண்டியது இனி பொது மக்களாகிய உங்கள் பொருப்பாகும்.